

சென்னை: ஆந்திராவின் ரேணிகுண்டாவை சேர்ந்த சங்கரையா (73). இவர் சென்னை ஆலந்தூரில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கரையா அரசு பேருந்தில் பயணம் செய்த போது, செல்போனில் ஒரு வரிடம், “சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் காலிப் பணியிடம் உள்ளது. முறைப்படி விண்ணப்பித்தால், நானே வேலை வாங்கிக் கொடுத்து விடுவேன்” என்று பேசியுள்ளார்.
இதை அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தாம்பரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், தனது மகள் பொறியியல் பட்டதாரி என்றும், அவருக்கு அந்த வேலை கிடைக்குமா? என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு சங்கரையா, “விண்ணப்பப் படிவத்துக்கு ரூ.2,500, எனக்கு ரூ.500 என மொத்தம் ரூ.3,000 கொடுத்தால் வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார். இதை நம்பிய ராமமூர்த்தி, ரூ.3,000-ஐ சங்கரையாவிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சங்கரையா மீண்டும் ராமமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதுடன், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரூ.65,000 கொடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து ராம மூர்த்தி ரூ.65 ஆயிரம் பணத்துடன் விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு சங்கரையாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராமமூர்த்தி, அவரை பிடித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில், விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததை சங்கரையா ஒப்புக் கொண்டார். போலீஸார் அவரை கைது செய்தனர்.