

சென்னை: புழல் மத்திய சிறைக்குள் கஞ்சாவை மறைத்து கடத்திச் சென்ற செவிலியர் உதவியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறை ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ் (51).
இவர் புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் மருத்துவமனையில் ஆண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கனகராஜ் வழக்கம்போல் சிறைக்குள் பணிக்குச் செல்வதற்காக வந்தார்.
அப்போது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்கள் அவரை சோதனை செய்தனர். அப்போது கனகராஜ் தனது உள்ளாடைக்குள் ஒரு பார்சலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே சிறைக் காவலர்கள் அந்த பார்சலை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர். அதில் 313 கிராம் கஞ்சா, ஒரு வாசனை திரவிய பாட்டில் ஆகியவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் கனகராஜை பிடித்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே வைத்து மர்ம நபர் ஒருவர் கனகராஜிடம் அந்த பார்சலை கொடுத்து, புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் பிளாக் 4-ல் இருக்கும் சில கைதிகளிடம் ஒப்படைக்குமாறு கூறியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து சிறைக்குள் கஞ்சாவை கடத்திக் கொடுக்க முயன்றதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? பார்சலை கொடுத்த நபர் யார்? சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு கஞ்சா வழங்க எவ்வளவு பணம் கைமாறியது? இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.