

சென்னை: மெரினாவில் நேபாள இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பின்புறம் உள்ள கல்லுக்குட்டை பகுதியில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் இறந்து கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள், செல்போன் மற்றும் கைப்பை ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சகா (27) என்பதும், இவர் விருகம்பாக்கம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீராம் சகா தாக்கப்பட்டாரா அல்லது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கொலை செய்தார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.