

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து கடத்தி வந்த கென்யா நாட்டு இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வரும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பெண் ஒருவர் கொக்கைன் போதைப் பொருளை கடத்தி வரவுள்ளதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த துறையின் அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு எத்தியோப்பியா தலை நகர் அடிஸ் அபாபாவில் இருந்து விமானம் வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த கென்யா நாட்டை சேர்ந்த 35 வயது பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கென்யாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சுற்றுலா விசாவில் வந்த அந்த பெண்ணை, சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் அதிகாரிகள் கேட்ட எந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். அவரது உடைமைகளிலும் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லாததால், பெண்ணை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருடைய வயிற்றை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் அதிக அளவில் கேப்சூல்கள் இருந்தன.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் உதவியுடன் பெண்ணின் வயிற்றுக்குள் விழுங்கி வந்த 70 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களை உடைத்துப் பார்த்தபோது உயர்தர கொக்கைன் போதைப் பொருள் இருந்தது.
மொத்தமாக ரூ.15 கோடி மதிப்புள்ள 850 கிராம் கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் அந்த பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் அந்தப் பெண்ணிடம், சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப் பொருளை கடத்தி வந்தார் என்று விசாரித்து வருகின்றனர்.