

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள். (உள்படம்) நிவிஷ்னா.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் தூத்தூர் அருகேயுள்ள சிலுப்பனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த தம்பதி மணிமாறன்-சரிதா. இவர்களது மகள் நிவிஷ்னா(3). நேற்று முன்தினம் மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சிறுமியை காணவில்லை.
பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிறிய குட்டையில் அச்சிறுமி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. சிறுமியின் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி, குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் போலீஸார் சென்று பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றனர். இதையடுத்து போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உடலை வாங்குவோம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.