

ஈரோடு: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27), இவரது மனைவி உத்ரா (26). இருவரும் திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டன்பாளையத்தில் வசித்து வந்தனர். உத்ரா, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 14-ம் தேதி பணிக்குச் சென்ற உத்ரா வீடு திரும்பவில்லை. கடந்த 17-ம் தேதி பெருந்துறை அருகே புதரில் உத்ரா சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதும், அணிந்திருந்த நகைகள் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதே மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றிய திருப்பூர், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த சரவணன் (23) என்பவருடன் உத்ரா இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணனைப் பிடித்து விசாரித்ததில், 4 பவுன் நகையைப் பறிக்கும் நோக்கில் உத்ராவை அழைத்துச் சென்று, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நகையைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. சரவணனை போலீஸார் கைது செய்தனர்.