

அசாருதீன்
ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள முகப்பேர் மேற்கு, ரெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன் (31). இவர் சென்னை, சேத்து பட்டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐசிஎம்ஆர்) மருத்துவ விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி ஹுருல் சமீரா (29). இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஆக. 25-ம் தேதி, ஹுருல் சமீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் அம்பத்தூர் கோட்டாட்சியர் சதீஷ்குமார், அசாருதீன் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், அசாருதீன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், ஹுருல் சமீரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.