

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர், பெண்களின் உறவினர்கள், பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலை தேடி சமீபத்தில் தமிழகம் வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசன்ஜித் தாஸ் (35) உள்ளிட்ட 6 இளைஞர்கள், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வெள்ளியூர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக நேற்று முன்தினம் வந்தனர்.
இவர்கள், வெள்ளியூர் அருகே அமணப்பாக்கம் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பிரசன்ஜித் தாஸ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமானதால் அவர், அமணப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.
மேலும், அமணப்பாக்கம் அருகில் உள்ள ராமராஜ கண்டிகை கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கு தனியாக இருந்த இரு பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டதையடுத்து, பெண்களின் தந்தை, உறவினர்கள், பொதுமக்கள், பிரசன்ஜித் தாஸை பிடித்து, கை,கால்களை கட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்து, மயங்கி கீழே விழுந்த பிரசன்ஜித் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, வெங்கல் காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, பிரசன்ஜித் தாஸ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த வெங்கல் போலீஸார், பிரசன்ஜித் தாஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, இரு பெண்களின் தந்தை ரவி (55), சித்தப்பா சிவகுமார் (45), உறவினர் ஜெயக்குமார்(28) ஆகிய 3 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.