

ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஐவர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 17 வயது சிறுவன் கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் செல்வப்பாண்டி (17). கடந்த 2017-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருஞ்சிறை கண்மாயில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். செல்வப்பாண்டி உடலைக் கைப்பற்றி கட்டனூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மதுரை படித்துறையைச் சேர்ந்த கார்த்திக் (35) என்பவரை செல்வப்பாண்டி தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்து, கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து செல்லப்பாண்டியை கொலை செய்து கண்மாய் பகுதியில் வீசியது தெரியவந்தது.
அதையடுத்து, கார்த்திக், மதுரை பிபிகுளத்தை சேர்ந்த குணசேகரபாண்டியன் (39), மதுரை மேல அண்ணா தோப்பு பகுதியைச் சேர்ந்த பட்டவன் ரஜினி (32), மதுரை படித்துறையைச் சேர்ந்த மகேந்திரன் (35), தினேஷ் (34), மணிகண்டசேதுபதி (37) மற்றும் 17 வயது சிறுவன் என 7 பேரை கட்டனூர் போலீஸார் கைதுசெய்தனர்.
அருப்புக்கோட்டையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு கார்த்திக் உயிரிழந்தார். 17 வயது சிறுவன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையின்போது குணசேகரபாண்டியன், பட்டவன் ரஜினி, மகேந்திரன், தினேஷ், மணிகண்டசேதுபதி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வசந்தகுமார் தீர்ப்பளித்தார்.