

தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி. வீட்டில் 87 பவுன் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏகே.எஸ்.விஜயன். திமுக விவசாய அணி மாநிலச் செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் உள்ளார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் உள்ள இவரது வீட்டில் நவ.28-ம் தேதி பீரோ உடைக்கப்பட்டு 87 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தருமபுரி ராயல் நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் நேற்று தருமபுரிக்குச் சென்று முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாட்ஷா(33), மொய்தீன்(37), மகள் ஆயிஷா பர்வீன்(30), மனைவி பாத்திமா ரசூல்(54) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் தஞ்சாவூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், 4 பேரையும் கைது செய்து 87 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.