

சதீஷ்
சென்னை: சென்னை ஓட்டேரி மங்களபுரத்தைச் சேர்ந்தவர் ரெபேகா (27). இவர் அயனாவரம் ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (37) என்பவரை காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு தனது மகளை சதீஷ் கொலை செய்துவிட்டு, பின்னர் தற்கொலைக்கு முயன்றார்.
இது தொடர்பாக புனித தோமையர்மலை போலீஸார் சதீஷை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், மனைவி ரெபேகாவை மிரட்டி வந்தார். இதுகுறித்து, ரெபேகா அளித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீஸார் சதீஷை மீண்டும் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று அங்கு பணியாற்றி வந்த ரெபேகாவிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரெபேகாவை சரமாரியாக வெட்டினார்.
சத்தம் கேட்டு வங்கி ஊழியர்கள்,பொதுமக்கள் ஓடி வந்து சதீஷை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த ரெபேகா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனர். முன்னதாக அவரிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள், ஒரு செல்போன், 2 லிட்டர் பெட்ரோல், லைட்டர், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சதீஷ் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரை நானே படிக்க வைத்தேன்.
தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதால் என்னை தவிர்க்க ஆரம்பித்தார். இதனால், ஏற்பட்ட விரக்தியில் மகளை கொலை செய்தேன். தற்போது மனைவியும் என்னை வெறுக்கிறார்.
இதனால், அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தவும், தப்பினால் கத்தியால் குத்தியும் கொலை செய்யும் திட்டத்துடன் மனைவி பணிபுரியும் வங்கிக்குச் சென்றேன். இதை அறிந்த காவலாளி இரும்பு நாற்காலியால் தாக்கி என்னை நிலைகுலைய செய்தார்.
எனினும், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றேன். வங்கி ஊழியர்கள் பொது மக்கள் தடுத்து விட்டனர் என சதீஷ் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.