

கும்பகோணம்: திருவிடைமருதூர் அருகே இளந்துறையில் பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மாமியார், மைத்துனரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் இளந்துறை கீழ மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் ராமராஜன்(25), கொத்தனார். இவரது மனைவி மகாதேவி(22). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தனது மனைவி எழுந்திருக்கவில்லை என்று கூறி, அவரை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு ராமராஜன் தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகாதேவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, திருநீலக்குடி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், மகாதேவி தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ராமராஜன் தினமும் மது அருந்திவிட்டு வருவதால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி, சம்பவத்தன்று தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், ராமராஜன் கட்டையால் மகாதேவியின் தலையில் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
பின்னர், அந்த இடத்தை ராமராஜன் சுத்தம் செய்துவிட்டு, மனைவி எழுந்திருக்கவில்லை என்றுகூறி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு பிரேத பரிசோதனையில் மகாதேவியின் தலையில் காயம் இருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை ராமராஜன் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதும், ராமராஜனுக்கு அவரது தாய் வெண்ணிலா(57), அண்ணன் முத்தரசன்(28) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேக மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக போலீஸார் மாற்றம் செய்து, ராமராஜன், வெண்ணிலா, முத்தரசன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.