

மதுரை: நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த்தை ஆம்னி பேருந்து ஓட்டுநர் போலீஸில் சிக்க வைத்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மதுரை இன்ஸ்டா ஜோடி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம். வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மீனாட்சி, அவரது காதலர் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 5 நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிஷாந்த் தருமபுரியில் சிக்கினார். தனியார் ஆம்னி பேருந்தில் பெங்களூருவி்ல் இருந்து சேலத்துக்கு பயணம் செய்தபோது தருமபுரி போலீஸார் அவரை பிடித்தனர்.
தனிப்படை போலீஸார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பேருந்துகள், ரயில்களில் மாறிமாறி பயணம் செய்த நிஷாந்த், அவர் கடைசியாக பயணம் செய்த ஆம்னி பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நிஷாந்த் பேருந்தில் ஏறியது முதல் தருமபுரி போலீஸாரிடம் சிக்கியது வரையிலான சம்பவங்களை விரிவாக தெரிவித்துள்ளார்.
நிஷாந்த் பேருந்தில் ஏறும்போது, அவருடன் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள், ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் நைசாக பேச்சு கொடுத்து, நிஷாந்த்துக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்குமாறு ரூ.500 கொடுத்துள்ளனர். நிஷாந்த் பேருந்தில் ஏறியதும் படுக்கையில் தூங்கிவிட்டார்.
ஓசூர் அருகே ராயக்கோட்டை பைபாஸ் ரோட்டில் சென்றபோது, பயணிகள் டீ, காபி சாப்பிடவும், கழிவறை செல்லவும் பேருந்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் இறங்கியபிறகு, நிஷாந்த், ஓட்டுநரின் செல்போனை வாங்கி யாரிடமோ பேசியுள்ளார்.
அப்போது, “நான் நிஷாந்த் பேசுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த வார்த்தை ஓட்டுநர் காதில் விழுந்தது. சந்தேகமடைந்த ஓட்டுநர், சமூக வலைதளங்களில் பரவும் மதுரை நகை்கடை கொள்ளையன் நிஷாந்த் வீடியோக்களையும், அவரையும் மாறி மாறி பார்த்துள்ளார். ஆனால், நிஷாந்த் முகத்தை மறைத்து தொப்பி அணிந்திருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. ஓட்டுநர் தனது சந்தேகத்தை நடத்துநரிடம் கூறியுள்ளார். உடனடியாக ஓட்டுநர், தனது நண்பரான தருமபுரி அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
அவர், உயர் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவிக்க, அவர்களின் ஆலோசனைப்படி, ஆம்னி பேருந்து தருமபுரி அருகே சேஷம்பட்டியில் உள்ள ஒரு டீ கடையில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் போலீஸார் பேருந்தை சுற்றி வளைத்தனர். தன்னை போலீஸார் மடக்கிவிட்டதை உணர்ந்த நிஷாந்த், ஓட்டுநரின் இருக்கை வழியாக குதித்து தப்பியோட முயன்றார். போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
ஓட்டுநரின் சந்தேகம், அவரது சாமர்த்தியமான செயல்பாடுகளே, கொள்ளையன் நிஷாந்த் சிக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
தனிப்படை போலீஸார் கூறியதாவது: மீனாட்சி, அவரது அம்மாவின் யூ டியூப், இன்ஸ்டா பதிவுகளுக்கு வீடியோக்களை எடுப்பது, அதை நேர்த்தியாக எடிட் செய்வது போன்றவற்றில் நிஷாந்த் உதவியுள்ளார்.
சோசியல் மீடியாவால் கை நிறைய சம்பாதிக்க முடியவில்லை, நல்ல வேலையும் கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் நிஷாந்த் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். அதனால், நண்பர்கள், குடும்பத்தினரிடம் அவமானப்பட்டுள்ளார். மீனாட்சியும் மதுரையில் புதிதாக கட்டும் வீட்டுக்கு போதிய பணமில்லாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்
பட்டு இருவரும் இணைந்து, பெரிய கொள்ளையை நடத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் முன்பாக, நகைக்கடையில் எப்படி கொள்ளையடிப்பது, உடைக்காமல் ரேக்குகளில் உள்ள நகைகளை கொள்ளையடிப்பது, ‘லிப்ட்’டில் நுழைந்து எப்படி வெளியே வருவது, நகைக்கடைக்குள் இருக்கும் சிசிடிவி கேமராக்களை எப்படி செயலிழக்க வைப்பது ஆகியவை பற்றி சமூக வலைதளங்களில் வீடியோக்களை நிஷாந்த் பார்த்துள்ளார்.
கொள்ளை அடிப்பதற்கு முன்பு கடைக்கு அடிக்கடி வாடிக்கையாளராக வரும் போதெல்லாம் தொப்பி அணிந்து முகத்தை மறைத்தது, கொள்ளையடித்த நேரத்தில் நம்பர் பிளேட் இல்லாத ‘ஸ்கூட்டி’யை பயன்படுத்தியதுதான் நிஷாந்த் செய்த தவறு, அதுதான் போலீஸார் துப்புதுலக்க உதவியாக இருந்துள்ளது.