

அமைந்தகரையில் வாடகை வசூல் விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 4-வது கூடு தல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த சகோதரர்கள் பிரபு, கோட்டீஸ்வரன் இவர்களுக்கு சொந்தமாக அமைந்தகரையில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டிருந்தனர். வீட்டில் வாடகைக்கு இருந்த கண்ணகி ஆறுமுகத்துக்கும் கோட்டீஸ்வரனுக்கும் வாகனம் நிறுத்துவது, கூடுதலாக குடிநீர் கேட்பது போன்ற விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டை காலி செய்யுமாறு கண்ணகி ஆறுமுகத்திடம் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2013ம் ஆண்டு மே 31ம் தேதி கண்ணகி ஆறுமுகத்தின் உறவினர் சிலம்பரசன் (23), ரஹ்மான் (23), ராஜ் (23), ஒரு சிறுவன் ஆகிய 4 பேரும் வீட்டின் முன்பு படுத்திருந்த கோட்டீஸ்வரனின் தலையில் சிமென்ட் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் கோட்டீஸ்வரன் உயிரிழந்தார்.
இதையடுத்து, 4 பேர் மீதும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர். சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மற்ற 3 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பீ.தமிழரசி முன்பு நடந்தது.
அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது: 3 குற்றவாளிகளும் வீட்டின் உரிமையாளரான கோட்டீஸ்வரனை கடந்த 2012ம் ஆண்டிலேயே தாக்கி, அவரது வலது கையை உடைத்துள்ளனர். இது தொடர்பாக அப்போதே போலீஸில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
முன் பகை காரணமாக 3 பேரும் சேர்ந்து கோட்டீஸ்வரனை கொலை செய்துள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி காவல் துறை நிரூபித்துள்ளது. எனவே, 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.