

கரூர்: கரூரில் இந்து மக்கள் கட்சி நிர்வா கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலை பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகியாகவும் உள்ளார். இவரது காரை நேற்றிரவு வீட்டின் எதிரே உள்ள சந்தில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
இன்று (நவ.9) அதிகாலை 3.15 மணி போல சுரேஷின் நண்பர் சுரேஷின் கார் தீப்பிடித்து எரிவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேஷ், அவரது நண்பர், அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸில் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளைக் கொண்டு காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கட்சி நிர்வாகியின் கார் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.