

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த மலேசியா இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது வந்த மலேசியாவை சேர்ந்த இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் தாய்லாந்தில் இருந்து வந்த அவரையும், அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, உடைமைகளில் ரூ.4 கோடி மதிப்புள்ள உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா 4 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் கடத்தல் குருவியாக செயல்படுவது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.