

வேலப்பன்
சென்னை: சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைதான தலைமைக் காவலரை பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் (11-ம் வகுப்பு மாணவன்) கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார்.
பெற்றோர் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால், சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் 2 நாள் தங்கியிருந்து வருவதாக கூறியதால் அவரை மட்டும் அங்கு விட்டு சென்றனர்.
இந்நிலையில் 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான சென்னை வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரியும் வேலப்பன் (35) என்பவரை வீட்டுக்கு அழைத்து அவருடன் மது அருந்தினார்.
போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதோடு, பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.
இதனால், பயமும் அதிர்ச்சியும் அடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டி தப்பினார்.
மேலும், அவர் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து வேலப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், சிறுவன் கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததையடுத்து, வேலப்பனை போக்சோ உட்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை பணி நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.