

திருவள்ளூர்: வேப்பம்பட்டை சேர்ந்த சீனிவாசன் (57) பெயிண்டராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவியின் சகோதரி, தன் கணவர் பிரிந்து சென்றதால் ஆதரவில்லாமல் இருந்ததால், சீனிவாசன் குடும்பத்தினருடன், இரட்டையர்களான 13 வயதுள்ள தன் 2 மகள்களுடன் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், சீனிவாசன் கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை சிறுமிகளில் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். தொடர்ந்து, மற்றொரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
சிறுமியின் தாய் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சீனிவாசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றத்துக்கு, சீனிவாசனுக்கு 39 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில், முதல் சிறுமிக்கு ரூ.3.50 லட்சம், 2-வது சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.