

கரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை ஓட ஓட விரட்டி சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டியது குளித்தலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் விஜய் என்ற மாணிக்கம் (31). இவர், ஆக.9-ம் தேதி 4 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, அவரது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி அவரது பாட்டியிடம் தெரிவித்ததையடுத்து, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாணிக்கத்தை பிடித்து, அவரை குளித்தலை காவல் நிலையத்துக்கு சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். வழியில், ஆத்திரமடைந்த பாட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணிக்கத்தை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீஸார் அரிவாளை பறிமுதல் செய்து, மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.