

ராஜேஸ்வரி
சென்னை: சென்னை புழல், சூரப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (64). ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐயான இவரது மனைவி வசுந்தராதேவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டில் 4 பெண்கள் வீட்டு வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசுந்தராதேவி, பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த வைரக்கல் பதித்த வளையல், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள், பிளாட்டினம் மோதிரம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயகுமார் புழல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புழல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார், வீட்டில் வேலை செய்து வந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், புழல் லிங்கம் தெருவைச் சேர்ந்த ராஜீ என்ற ராஜேஸ்வரி (38) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 6-ம் தேதி வீட்டில் விஜயகுமார் மட்டும் இருந்தபோது, அவர் அசந்த நேரத்தில் பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து பதினான்கரை பவுன் எடை கொண்ட தங்கம், வைர நகைகள், 8.9 கிராம் பிளாட்டினம் மோதிரம், 92.8 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட ராஜேஸ்வரியை போலீஸார் விசாரணைக்குப் பின்னர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.