

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 53 பவுன் நகை, ரூ.48 லட்சத்தை திருடிய நண்பர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (36).
இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும், மகனும் பிரிந்து சென்று தனியாக வசித்து வருகின்றனர்.
சதீஷ்குமார் 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் சதீஷ்குமாருக்கு தருண் (26) என்பவர் அறிமுகமானார்.
ஐதராபாத்தில் தொழில் செய்து வருவதாகவும், வியாபார விஷயமாக சென்னை வரும்போது நட்சத்திர ஓட்டல்களில் தங்கிச் செல்வதாகவும் தருண் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட தருண், தனது வியாபாரம் முடிந்து விட்டதாகவும், 2 நாட்கள் உங்களது வீட்டில் தங்கிக்கொள்ளலாமா என்றும் கேட்டுள்ளார். இதற்கு சதீஷ்குமார் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து தருண், சதீஷ்குமார் வீட்டில் தங்கியுள்ளார். ஆனால், தருணின் நடவடிக்கைகளில் சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை அவர் சரிபார்த்துள்ளார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த 53 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.48 லட்சம் பணம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் சதீஷ்குமாரின் வீட்டில் சுமார் 10 நாட்களாக தங்கியிருந்த தருண், அங்குள்ள பீரோ மற்றும் லாக்கர் சாவிகளை போலியாகத் தயாரித்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
மேலும், திருடிய தங்க நகைகளை விற்று கடன்களை அடைத்ததுடன், ஆடம்பர செலவுகளையும் செய்துள்ளார். அவரது சொந்த ஊர் சென்னை திருவொற்றியூர், கே.சி.பி காலனி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தருணை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் பணத்தை மீட்டனர்.