

சென்னை: தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைகாட்டி ரூ.6.74 லட்சம் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாநகராட்சி முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரைச் சேர்ந்தவர் கோகுல் (31). இவர் கடந்த 2021-ம் ஆண்டு, கரோனா காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
அப்போது மாநகராட்சியில் அவருடன் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வந்த பாடியநல்லூரைச் சேர்ந்த பிரவீன் குமார் (36) மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகிய இருவரும் நாங்கள் தொழில் ஒன்றை தொடங்கியுள்ளோம். அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய கோகுல் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் ரூ.9 லட்சத்து 4 ஆயிரம் பணத்தை பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவிக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். போலீஸில் புகார் இதனால் விரக்தி அடைந்த அவர் முதலீடு செய்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
தொடர் வற்புறுத்தலையடுத்து ரூ.2.30 லட்சத்தை மட்டும் திரும்பிக் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள ரூ.6.74 லட்சத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கோகுல், இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.