ஆன்லைன் செயலி மூலம் மோசடி: மதுரை, சிவகங்கையை தொடர்ந்து விருதுநகரில் குவியும் புகார்கள்

ஆன்லைன் செயலி மூலம் மோசடி: மதுரை, சிவகங்கையை தொடர்ந்து விருதுநகரில் குவியும் புகார்கள்
Updated on
1 min read

விருதுநகர்: எப்.கியூ.எல். இணைய செயலி மோசடி தொடர்பாக மதுரை, சிவகங்கையைத் தொடர்ந்து விருதுநகரிலும் புகார்கள் குவிந்து வருகின்றன.

ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் அமெரிக்க டாலர் மதிப்பில் அதிக லாபம் பெறலாம் என்று கூறி தென் மாவட்டங்களில் எப்.கியூ.எல். இணைய வழியாக மோசடி நடந்து வந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களை குறிவைத்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய ரூபாயில் முதலீடு செய்தால் எப்.கியூ.எல். இணைய செயலி மூலம், அதற்கு அமெரிக்க டாலர் மதிப்பில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறி சங்கிலி தொடர்போல் ஒருவர் மற்றொருவரை இணைக்கும் வகையில் இந்த மோசடி நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமானார் இதை நம்பி பணத்தை இழந்துள்ளனர். விசாரணையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த இணைய மோசடியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் முதலீடு செய்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் நேற்று இரவும், இன்று காலையும் புகார் கொடுத்தனர். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்திலும் பல கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, திருச்சுழி அருகே உள்ள திருவளர்நல்லூரைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அய்யம்பாண்டி (24)என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் இன்று கொடுத்த புகாரின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த முத்துராஜ், முத்துப்பாண்டி, திராவிடமணி ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் செயலி மூலம் மோசடி: மதுரை, சிவகங்கையை தொடர்ந்து விருதுநகரில் குவியும் புகார்கள்
தயாராகிறது ராமர் கோயில் ஆவணப் படம்: பிரதமர் மோடியின் பேட்டி, 500 வருட போராட்டம் இடம்பெறுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in