

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை பாண்டவர் மங்கலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சுமை வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தீக்குச்சி மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தீக்குச்சி மூட்டையை இழுத்துச் சென்றபோது, ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென தீப்பிடித்துள்ளது. மேலும், தீ பரவ தொழிற்சாலை முழுவதும் எரிய தொடங்கியது. இதில், தொழிற்சாலையில் வேலை பார்த்த கோவில்பட்டி அருகே விஜயாபுரி கீழத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (27), கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் (47), விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலை முத்து (42) ஆகிய 3 பேர் மீதும் தீப்பற்றியுள்ளது. புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் விபத்தில் சிக்கி ஊழியர்கள் மூன்று பேரை மீட்டுள்ளனர்.
இதில், கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த கணேசன், சுடலைமுத்து ஆகியோருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் தீக்குச்சி மூட்டைகள் கொண்டு வந்த வாகனமும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜூ பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதில், இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக தீக்குச்சிகளை சுமை வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் இந்த ஆலையில் பணியாற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் அதிக தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
பட்டாசு தொழிற்சாலைகளை போல் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான் கடந்த 2020ம் ஆண்டு நவ.22-ம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்தார். இந்த 5 ஆண்டுகளில் அது நடைமுறையில் உள்ளதா என்பது தெரியவில்லை.
நலவாரியத்தின் மூலம் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்து உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் நிலையில், இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் அவர்களது குடும்பத்துக்கு நிவாரண நிதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நலவாரியம் அமைக்கப்பட்டது.
இன்று நடந்த சம்பவம் குறித்து நான் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். அவருக்கு உடனடியாக முதல்வரின் நிவாரண நிதி கிடைக்க பரிந்துரை செய்திருப்பதாக கூறினார். தீப்பெட்டி தொழிலாளர் நலவாரியம் மூலமாகவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் உதவி வழங்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கடம்பூர் செ.ராஜூ வலியுறுத்தியுள்ளார்.