

மனோகர் பிரசாத்
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநர் ராகுல்குமார் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், நீலாங்கரையைச் சேர்ந்த சினிமா பிரமுகர் மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தங்களது சொத்துகளை அடமானம் வைத்து நிறுவனத்திடம் ரூ.6 கோடி கடன் பெற்றதாகவும், ஆனால் அந்த சொத்துகள் ஏற்கெனவே தனியார் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்ததையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த சொத்துக்களுக்கு எதிராக இணைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததையும் மறைத்து கடன் பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடன் தொகையை பெற்றுக்கொண்ட அவர்கள், அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், இதுதொடர்பாக மனோகர் பிரசாத், ஆனந்த் பிரசாத் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மனோகர் பிரசாத்தை (63) நேற்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.