

பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ்
திருவாரூர்: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உட்பட 2 பேருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் கிராமத்தில் இருந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் துரப்பணப் பணிகள் மேற்கொள்ள, அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள், 2015-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தளவாடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, பி.ஆர்.பாண்டியன் (55), அப்போதைய விக்கிரபாண்டியம் ஊராட்சித் தலைவர் செல்வராஜ் (48) உட்பட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது பொது சொத்துகளைச் சேதப்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவாரூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், குற்றம் சுமத்தப்பட்ட பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் 5 மாதங்கள், செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ.13,000 அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் இன்று உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 20 பேரில் கலைச்செல்வம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், மற்ற 18 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பைத் தொடர்ந்து, பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோரை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். செல்வராஜ் தற்போது அதிமுக விவசாய அணி கோட்டூர் ஒன்றிய துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.