

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செல்வதற்காக இரவு 11 மணியளவில் பயணி ஒருவர் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் கட்டணம் எவ்வளவு என்று கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர், கட்டணம் ரூ.1,500 என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு பயணி, ‘விசேஷம் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே கட்டணம் உயர்வாக வாங்குவீர்கள். இப்போது சாதாரண நாளில் கட்டணத்தை இவ்வளவு உயர்த்தி வாங்குகிறீர்களே?’ என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர்.
இதனை பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து சம்பந்தப்பட்ட பயணி, ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் கிளாம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.