

லாலாபேட்டை வாழைத்தோப்பில் மோப்ப நாய் மூலம் சோதனை | மூதாட்டி இளஞ்சியம்
கரூர்: கரூர் அருகே வாழைத் தோட்டத்துக்கு புல்லறுக்கச் சென்ற மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சரக டிஐஜி சிபி சக்கரவர்த்தி, எஸ்பி ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள லாலாபேட்டையை அடுத்த விட்டுக்கட்டியைச் சேர்ந்தவர் இளஞ்சியம் (60). திருமணமான சில நாட்களிலேயே கணவரை பிரிந்த, இவர் அவரது அக்கா குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். லாலாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள வாழைத்தோப்பில் கால்நடைகளுக்கு புல்லறுப்பது வழக்கம்.
நேற்று மாலை புல்லறுக்கச் சென்ற இளஞ்சியம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் இரவு முழுவதும் அக்கம்பக்கத்தில் அவரை தேடியுள்ளனர்.
அவர் புல்லறுக்கச் செல்லும் வாழைத் தோட்டம் பகுதியில் இன்று (அக்.7) காலை தேடி பார்த்துள்ளனர். அப்போது வாழைத் தோப்பில் ரத்தக்கறைகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இளஞ்சியத்தை தேடியப்போது புதர்கள் நடுவே கழுத்தறுக்கப்பட்டு நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருச்சி சரக டிஐஜி சி.பி.சக்ரவர்த்தி, எஸ்பி ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தடயவியல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தியை காணவில்லை. ஒருவேளை நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.