

கும்பகோணம்: பாபநாசம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவரும், அவரை காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் ரயில் மோதி உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கிரித்தால் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (30).இவர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோபுராஜபுரத்தில் ரயில்வே இருப்பு பாதை கேட்கீப்பராக பணியாற்றி வந்தார். பாபநாசத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார்.
அந்த்யோதயா விரைவு ரயில்: இந்நிலையில், ராகுல் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்த்யோதயாவிரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். ரயில் அவரை நெருங்கிவந்துவிட்டதை பார்த்த ராகுல் ஓடிச் சென்று அவரை காப்பாற்றமுயன்றுள்ளார்.
அப்போது, ரயில் மோதியதில் ராகுலும், அந்த முதியவரும் உயிரிழந்தனர். இதில், அந்த முதியவரின் உடல்,ரயிலுடன் சுமார் ஒரு கி.மீ. வரை இழுத்துச் செல்லப்பட்டது.
இதுதொடர்பாக கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். ரயில் மோதி உயிரிழந்த கேட் கீப்பர் ராகுலுக்கு திருமணமாகி 5 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.