ஓசூர் அருகே சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு

உடலை அப்புறப்படுத்தியதாக 4 பேர் கைது
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் அருகே சிக்கன் இறைச்சித் துண்டு தொட்டையில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடலை அப்புறப்படுத்தியதாக அவரது நண்பர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடத்தூரைச் சேர்ந்தவர் சிவப்பா (40). ஓட்டுநரான இவர், ஓசூர் பாகலூரில் வசித்து வந்தார். கடந்த 20-ம் தேதி பாகலூர் தேவிரப்பள்ளி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பாகலூர் போலீஸார் சம்பவ இடத்துக் குச் சென்று சிவப்பாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக் காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிவப்பாவின் தொண்டையில் சிக்கன் இறைச்சித் துண்டு சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 20-ம் தேதி தேவிரப்பள்ளியில் உள்ள வெங்கடேஷ் (30) என்பவரது வீட்டில் சிவப்பா, அவரது நண்பர்களான ஆளூர் ராஜேஷ் (35), சீனிவாஸ் (42), பெலத்தூர் தேஜூ (32) ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, சிக்கன் சாப்பிட்ட சிவப்பாவின் தொண்டையில் இறைச்சித் துண்டு சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்க மடைந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், சிவப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து, அவரது உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தேவிரப்பள்ளி பகுதியில் உள்ள பாறை மீது வைத்துவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சிவப்பாவின் உயிரிழப்பை மறைக்க முயன்றதாக ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பாகலூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு
ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2087 கோடி நிலுவை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in