கோவை: 900 பவுன் நகை மோசடி வழக்கில் மருத்துவர் கைது

கோவை: 900 பவுன் நகை மோசடி வழக்கில் மருத்துவர் கைது
Updated on
1 min read

கோவை: கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன். ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரது 2-வது மகள் கோவையில் மருத்துவராக உள்ளார்.

இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்த மருத்துவர் விக்னேஷூடன், 2-வது திருமணம் நடந்தது.

இதற்கிடையே மருமகன் விக்னேஷிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வீட்டில் நகை வைத்திருந்த லாக்கரின் சாவியை சண்முகபாண்டியன் ஒப்படைத்தார்.

இதன் பிறகு சில மாதங்களில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் விக்னேஷிடம் அளித்த லாக்கர் சாவியை சண்முகபாண்டியன் திரும்பப்பெற்று லாக்கரை திறந்து பார்த்தார்.

அப்போது அதில் இருந்த 1,000 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விக்னேஷிடம் அவர் கேட்டபோது, 100 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துவிட்டு, 900 பவுன் நகைகளை திருப்பித் தரவில்லை.

இதையடுத்து விக்னேஷ், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் சண்முகப்பாண்டியன் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மருத்துவர் விக்னேஷை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை: 900 பவுன் நகை மோசடி வழக்கில் மருத்துவர் கைது
தமிழகத்துக்கு நீண்ட காலத்துக்கு நன்மை தரக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்: இளைஞர்களுக்கு பேரவை தலைவர் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in