டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி பறிப்பு
புதுடெல்லி: தெற்கு டெல்லியிலுள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் முதிய தம்பதியினர் வசிக்கின்றனர். இருவருமே டாக்டர்கள். அமெரிக்காவில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இந்தியா திரும்பியுள்ளனர்.
இவர்கள் சார்பில் டெல்லி சைபர் கிரைம் போலீஸில் ஒரு புகார் தரப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி செல்போனில் எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் போலீஸார் என்றும், எங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அழைப்பில் இருக்குமாறு, அழைப்பை துண்டித்தால் நேரில் வந்து கைது செய்து விடுவதாகவும் மிரட்டினர். தொடர்ந்து எங்களை வீடியோ காலில் இருக்குமாறு அவர்கள் மிரட்டினர்.
பின்னர் எங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிந்து பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றிவிடுமாறு தெரிவித்தனர். ரூ.14 கோடி அளவுக்கு அவர்கள் பணத்தை மாற்றிவிட்டோம். பிறகுதான் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை அவர்கள் எங்களை மிரட்டி வந்தனர். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
