2 நாட்களாக தேடியும் கடையம் மலையில் பதுங்கிய ரவுடி சிக்கவில்லை!

ரவுடி பாலமுருகன்

ரவுடி பாலமுருகன்

Updated on
1 min read

கடையம் அருகே மலையில் பதுங்கியிருந்த ரவுடியை, போலீஸ் குழுவினர் 2 நாட்களாக தேடியும் அவர் சிக்கவில்லை.

தென்காசி மாவட்டம், கடையம், கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவர் மீது, தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு காவல் நிலையங்களில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சூர் சிறையில் இருந்த பாலமுருகனை கடந்த நவம்பர் மாதம் அருப்புக்கோட்டை போலீஸார் அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் திருச்சூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறை வளாகத்தில் இருந்து பாலமுருகன் தப்பிச் சென்றார். இதையடுத்து, பாலமுருகனை பல்வேறு பகுதிகளில் போலீஸார் தேடி வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை மாலையில் கடையம் ராமநதி அணை அருகே மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி. எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படை போலீஸார் அந்த மலைப் பகுதிக்குச் சென்று பாலமுருகனை தேடினர்.

இரவு நேரத்தில் மழை பெய்ததாலும், தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, செங்குத்தான பாறை மீது ஏறிய 5 போலீஸார் கீழே இறங்க முடியாமல் சிக்கியதாலும் பாலமுருகனை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

10 மணி நேரத்துக்கு மேல் மலையில் தவித்த போலீஸார் தீயணைப்புப் படையினர் உதவியுடன் மறுநாள் காலையில் மீட்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ட்ரோன்கள் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. இரண்டாவது நாளாக தேடுதல் பணி நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. 2 நாட்களாக உணவின்றி மலைப் பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பது சாத்தியமா என்றும், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டபோது பாலமுருகன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in