பரமத்திவேலூர் அருகே முகமூடி அணிந்த 4 பேர் அட்டூழியம்: தம்பதியைக் கட்டிப்போட்டு ரூ.40 லட்சம், 40 பவுன் நகை கொள்ளை

தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை
பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்த வெல்ல வியாபாரி வைரவன் வீடு.

பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்த வெல்ல வியாபாரி வைரவன் வீடு.

Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெல்ல வியாபாரி மற்றும் அவரது மனைவியை கத்தி முனையில் மிரட்டி, கட்டிப்போட்டு 40 பவுன் தங்க நகை, ரூ.40 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் சினிமா கொட்டகை மேடு பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் (60). வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 1 மணியளவில் வீட்டின் மாடிக் கதவை உடைத்து முகமூடி அணிந்த 4 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர், தம்பதியை கத்தி முனையில் மிரட்டி கட்டிப் போட்டனர்.

கத்தியால் தாக்கியதில் வைரவனின் கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பீரோவை உடைத்து, அதில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.40 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

பின்னர் கயிற்றில் இருந்து விடுபட்ட வைரவன், இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக், காவல் துணைக் கண்காணிப்பாளர் வெண்ணிலா ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மோப்ப நாய் வரவழைக் கப்பட்டு சோதனை நடத் தப்பட்டது. அப்போது, வைரவன் வீட்டில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய், பின்னர் அங்கேயே நின்றது.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் வெண்ணிலா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சங்கரபாண்டியன், உமாசங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்த வெல்ல வியாபாரி வைரவன் வீடு. </p></div>
ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்தி ஏமாந்தவர் தற்கொலை: நத்தம் அருகே உறவினர்கள் மறியல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in