

சோழிங்கநல்லூர்: கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் மகேந்திரா ராவ், அவரது மனைவி சங்கீதா ராவ் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
சுமார் 3 வாரங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவசண்முகராஜ் என்பவரும் அங்கு குடியேறினார். குடியிருப்பில் அனைவருக்கும் பொதுவான பாதையை அடைத்து சிவசண்முகராஜ் வேலி அமைக்க முயன்றதாகவும், இதற்கு சங்கீதா ராவ் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது டெல்லியில் இருந்த தனது கணவர் மகேந்திரா ராவிடம் சங்கீதா ராவ் இதுகுறித்து தெரிவித்ததாகவும், அவர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோது, சிவசண்முகராஜ் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சங்கீதா ராவ், அவரது வருங்கால மருமகளின் செல்போன் எண்களை அவர்களின் அனுமதியின்றி பெற்ற சிவசண்முகராஜ், நள்ளிரவு நேரங்களில் வாட்ஸ்-ஆப் மூலம் மெசேஜ்கள் மற்றும் ரீல்ஸ்களை அனுப்பியதாக தெரிகிறது.
இது தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகும் சிவசண்முகராஜ் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து மகேந்திரா ராவ் குடும்பத்தினர் நேற்று தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.