

அபிமன்யு
பெரம்பலூர்: காதலித்த சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்த சிறுமியின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் மகன் அபிமன்யு (21). பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், அண்மையில் அந்த மாணவிக்கு செல்போன் வாங்கித் தந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த அந்த மாணவியின் தாய், தந்தை இருவரும் நேற்று முன்தினம் இரவு அபிமன்யு வீட்டுக்குச் சென்று அவரை கண்டித்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இரும்பு ராடு மற்றும் கத்தியால் அபிமன்யுவை சிறுமியின் தந்தை தாக்கியுள்ளார். இதில், அபிமன்யு அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கை.களத்தூர் போலீஸார் சென்று அபிமன்யு உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் தாய், தந்தையை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.