

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயிலில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து (பி.ஆர்.டி.,) பல்லாவரம் ரூட் தல என்ற, இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்கை பின்தொடரும் பச்சையப்பன்– நத்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே யார் ரூட் தல என்ற பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி மாலை, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலில், பச்சையப்பன் – நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் ரூட் தல பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ரயில் குரோம்பேட்டை வந்ததும் இரண்டு கல்லூரி மாணவர்களும் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை, நந்தனம் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் பச்சையப்பன் கல்லூரியில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும், ஆகாஷ் (18) என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸார் நந்தனம் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்தனர்.