கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை: சாதிய ரீதியில் அணுகியதாக தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை: சாதிய ரீதியில்  அணுகியதாக தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on: 
1 min read

கோவை: கோவையில் 11-ம் வகுப்பு படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக, சாதிய கண்ணோட்டத்தோடு மாணவரை அணுகியதாக தலைமை ஆசிரியர், ஆசிரியர், இரு மாணவர்கள் என 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை, பீளமேடு சிருங்கார் நகர் அருகேயுள்ள, துரைசாமி லேஅவுட் 5-வது வீதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு மனைவி, மகள், அகிலன் (16) என்ற மகன் ஆகியோர் உள்ளனர். அகிலன் பீளமேடு அவிநாசி சாலை, அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று (அக்.21) அந்த மாணவர் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர், அகிலனின் பெற்றோர் வேலைக்கும், சகோதரி கல்லூரிக்கும் புறப்பட்டுச் சென்றனர்.

அதன் பின்னர், வீட்டுக்கு திரும்பிய அகிலன், கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வேலைக்குச் சென்று விட்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது அகிலன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அகிலனிடம் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் சாதிய கண்ணோட்டத்தில் அணுகி ஒதுக்கியதாகவும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோா் சாதிய கண்ணோட்டத்தில் அணுகியதாலும் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பீளமேடு காவல் நிலையத்தை நேற்று (அக்.21) இரவு முற்றுகையிட்டு தாய் கெளசல்யா தேவி புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பீளமேடு போலீஸார் பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார், சக மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை: சாதிய ரீதியில்  அணுகியதாக தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு
விருத்தாசலத்தில் ஆசிரியை வீட்டில் நகை, கார் திருடிய இரண்டு பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in