

மேலூர் அருகே நடந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.
மதுரை: மதுரை மேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து மைய தடுப்புச் சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர்.
சென்னை பாடிபாக்கத்தைச் சேர்ந்த கனகராஜ் (55), ராஜகுமாரி (50) தம்பதியின் மகன்கள் ஸ்ரீராம் (32), பாலாஜி (28) ஸ்ரீராம் மனைவி ரஞ்சனா (27). இவர்களது மகள் கிருத்திகா (2) ஆகியோர் ஒரே காரில் பாலாஜி மனைவியின் வளைகாப்பு விழாவுக்காக சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றனர். காரை ஸ்ரீராம் ஓட்டினார்.
கார் மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 6 மணிக்கு சென்றது. திடீரென நிலைதடுமாறிய கார் முன்னால் சென்ற பைக் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மையத்தடுப்பைத் தாண்டி எதிர் திசைக்குபாய்ந்து, அங்கு எதிரில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜகுமாரி, ஸ்ரீராம், ரஞ்சனா, குழந்தை கிருத்திகா, பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கனகராஜ், மற்றொரு காரின் ஓட்டுநரான மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் பைக்கில் சென்றசிவகங்கையைச் சேர்ந்த முருகன், மற்றொரு முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மேலூர் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சென்று உடல்களை மீட்டனர். மேலும், காயமடைந்த கனகராஜ் உள்ளிட்ட 4 பேரையும் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.