

ஆகாஷ், ஆதேஷ், சபீனா பார்வா
சென்னை: சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர், 12-வது தெருவில் வசித்து வருபவர் வைதேகி (46). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம்
ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் கடந்த 10-ம் தேதி வழக்கம்போல பணிக்குச் சென்று மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே இருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக அவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மும்பையைச் சேர்ந்த ஆகாஷ் கங்காராம் சாவன் (30), அவரது சகோதரர் ஆதேஷ் கங்காராம் சாவன் (27) மற்றும் சத்தீஸ்கர்மாநிலம் ஜஸ்பூரைச் சேர்ந்த சபினா பார்வா (32) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் கங்காராம் சாவன், வைதேகியின் மகள் ராயப்பேட்டையில் நடத்திவரும் உயர்தர காபி கடையில் வேலை செய்துள்ளார். அப்போது வைதேகி வீட்டின் ஒரு சாவியை திருடி எடுத்து வைத்துக்கொண்டு, அவரது தம்பி ஆதேஷ் கங்காராம் சாவன், தோழி சபினா பார்வா ஆகியோருடன் சேர்ந்த திருட திட்டமிட்டார். அதன்படி 3 பேரும் சம்பவத்தன்று சென்னை வந்து வைதேகி வீட்டில் திருடியது தெரியவந்தது. இந்த வழக்கில் தொர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.