

கேரள மாநிலம், நெய்யாற்றின் கரை காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் ரம்யா (22). மார்த்தாண்டத்தில் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை தனது அண்ணன் ரஞ்சித் குமார் என்பவருடன் பைக்கில் பணிக்கு செல்வதற்காக மார்த்தாண்டத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
பைக் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் போது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியது. ரஞ்சித், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே சாலையின் ஓரம் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்டுக்குள் விழுந்தனர்.
பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ரஞ்சித் குமார் உயிரிழந்தார். ரம்யா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த விபின் ஜோ என்பவரும் பலத்த காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பைக், கார்களில் செல்லும் பலர் இதை பொருட்படுத்தாததால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.