

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரூ.12.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்திய வாகனத்துடன், உடைந்த ஏடிஎம்-யையும் ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர் திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது.
இந்த மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரம் மாயமானது தெரியவந்ததையடுத்து பூந்தமல்லி காவல் ஆணையர், வெள்ள வேடு போலீஸார் ஏடிஎம் மையம் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில், ரூ.12.5 லட்சம் பணம் நிரப்பப்பட்டிருந்த அந்த ஏடிஎம் இயந்திரத்தை முகமுடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது. அந்த கும்பல் ஆம்னி வேனில் இயந்திரத்துடன் தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதனிடையே கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களை வர வழைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சத்திரம் அருகே கிருஷ்ணா கால்வாய் கரையில் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் இருப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் காலி ஏடிஎம்-யைக் கைப்பற்றி தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் மையம் அருகிலேயே இயந்திரத்தை உடைக்க முடியாததால் வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைத்து, பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தண்டலம் அருகே கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆம்னி வேன் கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனத்தை போலீஸார் மீட்டனர்.
கொள்ளையர்கள் ஆம்னி வேனை அங்கு நிறுத்திவிட்டு தனித்தனி இருசக்கர வாகனங்கள் மூலம் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. எனவே இருசக்கர வாகனங்களின் பதிவு எண்ணைக் கொண்டு போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.