

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே 4 சடலங்கள் மீட்கப்பட்ட காரில் தடயங்களை சேகரிக்கும் தடயவியல் நிபுணர்கள்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முற்றிலும் எரிந்த காருக்குள், சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாகக் கிடந்தனர்.
போலீஸார் உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கிஉள்ளனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திசையன்விளை தாலுகா பெட்டைக்குளம் கிராமத்திலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் சாலையோரத்திலுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கார் ஒன்று நிற்பது குறித்து, திசையன்விளை போலீஸாருக்கு நேற்று காலையில் தகவல் கிடைத்தது.
போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது முற்றிலும் எரிந்த நிலையிலிருந்த காருக்குள் 4 சடலங்கள் எரிந்த நிலையில் கிடந்தன. தகவலறிந்து வந்த எஸ்பி பிரசன்னகுமார், டிஎஸ்பி வெங்கடேஷ் உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தடய அறிவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். எரிந்து சாம்பலான கார் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. இதனால், காரில் இருந்தவர்கள் 4 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், காரில் இறந்து கிடந்தவர்கள் சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா என்பதும் மற்ற இருவர் இந்த தம்பதியரின் மகள்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் கடந்த 13-ம் தேதி திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவில் இஸ்லாமியர்களின் புனித தலமான ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவில் நடைபெற்ற ரமலான் நோன்பின் 27-வது இரவான, லைலத்துல் கத்ரு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
சகர் உணவு முடிந்த பின்னர், பள்ளிவாசலில் இருந்த ஏழைகளுக்கு உடைகளை தானமாக வழங்கினர் என ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் தொல்லையால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வீட்டை விற்றதாகவும், மேற்கொண்டு கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதேநேரத்தில் மர்ம நபர்களால் 4 பேரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர். முற்றிலும் எரிந்த காருக்குள் 4 பேர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.