

சென்னை: ஐ.டி. பெண் ஊழியரை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, பைக் டாக்ஸி பைக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவர், தங்கி அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்கிறார்.
இந்நிலையில், அவர் கடந்த 22-ம் தேதி அதிகாலை பணி முடிந்து துரைப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெரு வழியாக தங்கும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஐ.டி. ஊழியரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிடவே பைக்கில் வந்த இளைஞர் அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தப்பிய நபர் ஓட்டி வந்தபைக் எண்ணை அடிப்படையாக வைத்து விசாரிக்கப்பட்டது.
இதில், ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு தப்பியது பெருங்குடி ராஜீவ் நகரில் வசிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு (40) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவரது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் பாபு சென்னையில் தனியார் பைக் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.