மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகைத் திருட்டு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேரை சிபிஐ கைது செய்தது. இதில் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜோசப் ஜாய் ரத்தினராஜ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில், ‘மனுதாரர்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி செயல்பட்டனர். அஜித்குமார் வலிப்பு காரணமாக உயிரிழந்தார். தனிப்படை காவலர்கள் தாக்கியதால் இறக்கவில்லை. போலீஸார் தாக்கல் செய்துள்ள வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணங்கள் உயர் அதிகாரிகளையும், உள்ளூர் போலீஸாரையும் பாதுகாக்க புணையப்பட்டவை. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

சிபிஐ தரப்பில், ‘அஜித்குமார் காவல் மரணத்தில் மனுதாரர்களுக்கு தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கவும், தடயங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘உயர் நீதிமன்ற உத்தரவுபடி அஜித்குமார் மரணத்தில் மற்றவர்களின் தொடர்பு குறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் 5 மாதம் சிறையில் உள்ளனர். இது நீண்ட காலம் அல்ல. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in