

மீட்கப்பட்ட குழந்தையை கொண்டு செல்லும் பாட்டி. (உள்படம்) கைதான மீனாட்சி.படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் குழந்தையைக் கடத்திய பெண்ணைக் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). பெயின்டர். இவரது மனைவி சுகன்யா (30). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த சுகன்யா, பிரசவத்துக்காக கடந்த 11-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு துணையாக, அவரது உறவுப்பெண் பிரேமா இருந்துள்ளார்.
சுகன்யாவுக்கு பக்கத்து பெட்டில் இருந்த பெண் ஒருவர், பிரேமாவுடன் நட்புடன் பழகியுள்ளார். தனது பெயர் மீனாட்சி என்றும், 7 மாத கர்ப்பம் என்றும், ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் சுகன்யாவின் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வதாக கூறி, பிரேமாவிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்ற அந்தப் பெண், மீண்டும் வார்டுக்கு திரும்பி வரவில்லை.
மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் தேடியும் மீனாட்சியையும், குழந்தையையும் காணாததால் அதிர்ச்சியடைந்த சுகன்யா, பிரேமா ஆகியோர், அரசு மருந்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, மீனாட்சி என்ற பெயரில் யாரும் அந்த வார்டில் நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மகப்பேறு வார்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை தூக்கிச் செல்லும் அந்தப் பெண், அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மலையாளப்பட்டி என்ற இடத்தில் பதுங்கியிருந்த மீனாட்சியை, குழந்தையுடன் பிடித்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உப்போடை புதூரைச் சேர்ந்த சுரேஷ் மனைவி மீனாட்சி(38) என்பதும், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவமனையில் சுகன்யாவுடன் நட்புடன் பழகி குழந்தையை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், குழந்தையை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப் பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட போலீஸாரை, காவல் ஆணையர் காமினி பாராட்டினார்.
விஜய் கோரிக்கை: தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரசவ வார்டுகளில், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். குழந்தை கடத்தலைத் தடுக்க, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.