

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பெண் எஸ்.ஐ-யின் மகளைத் தாக்கி நகையைப் பறித்து தப்பிய பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கமலலோஷினி(25). திருமணமான இவர், நேற்று கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு நேர்காணல் தேர்வுக்காகச் சென்றார்.
5.5. பவுன் நகை பறிமுதல்: நேர்காணல் முடிந்து, அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார். பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு அவர் சென்றபோது, பின்னால் வந்த பெண், கமலலோஷினியின் கழுத்தை இறுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 5.5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத கமலலோஷினி அதிர்ச்சியில் கூச்சலிட்டார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, அந்தப் பெண் அங்கிருந்து தப்பிவிட்டார்.
உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் கமலலோஷினி புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை போலீஸார் விசாரணை: முதல்கட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதைச்சுற்றி பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, அதை அடிப்படையாக வைத்து தனிப்படை போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். செயினைப் பறிகொடுத்த கமலலோஷினி, கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு எஸ்.ஐ. காஞ்சனா என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.