

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் புறவழிச்சாலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க கோரிக்கை விளக்க மாநாடு கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கிருந்து கிளம்பியபோது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த திமுக மாவட்ட வர்த்தகர் அணி பொருளாளர் ரங்கநாதன் என்பவர், சீமானை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் சீமான் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் சேர்ந்து திமுக பிரமுகரை தாக்கினர். இதில் காயமடைந்த ரங்கநாதன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக பிரமுகர் ரங்கநாதன் மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து ரங்கநாதன் நேற்று முன்தினம் சீமான் மற்றும் அவரது கட்சியினர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பிரதாப் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். நீண்ட ஆலோசனைக்குப் பின் நேற்று முன்தினம் இரவு ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில் சீமான் மற்றும் அவரது கட்சிப் பிரமுகர்கள் 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை அளித்த புகாரின்பேரில் ரங்கநாதன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.