

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்ட விரோதமாக வெளியான விவகாரத்தில், மேலும் ஒருவரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், சட்ட விரோதமாக இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதுகுறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாநில சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தது.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, சினிமா உதவி எடிட்டர், மென்பொருள் பொறியாளர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், தொடர்புடைய சில முக்கிய குற்றவாளிகள் மீதுகுண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியும், மூளையாக செயல்பட்டவருமான மேலும் ஒருவரை சைபர் க்ரைம் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
விசாரணையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாகப் பரப்பியதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், கைதானவரின் பெயரை போலீஸார் வெளியிடவில்லை. இந்த வழக்குத் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.