

புதுச்சேரி செட்டித்தெருவில் உள்ள மருந்துப் பொருட்கள் மொத்த விற்பனையகம் ஒன்றில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அங்கிருந்து பல்வேறு மருந்து, மாத்திரைகளை கைப்பற்றிச் சென்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. குடோனுக்கு சீல் வைத்து ரூ. 30 கோடி மாத்திரைகள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலியாக மருந்து, மாத்திரைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம், திருபுவனை பாளையத்தில் அண்மையில் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
போலி மருந்து தொழிற்சாலையில் இருந்து இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரதான நோய்களுக்கு பிரபல நிறுவனத்தின் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த, இந்த தொழிற்சாலை மூலம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். போலி தொழிற்சாலை நடத்திய ராஜா உட்பட 10 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
இடையார்பாளையம் போலி மாத்திரைகள் குடோனில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீஸார்.
இந்த இரு தொழிற்சாலைகளில் இருந்து பல நூறு கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலி மருந்து தொழிற்சாலைக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி 7 இடங்களில் ரெய்டு நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து போலி மருந்து விவாகரங்களில் தொடர்புடைய மேலும் 7 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்த தொடங்கினர்.
முதலில் புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள மருந்தகத்தில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி தேவகிரி, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிபர் ஆகியோர் சோதனை நடத்தினர்.
செட்டித்தெருவில் உள்ள தனியார் மருந்து விற்பனையகத்தில் மாத்திரைகளை சோதனைக்கு எடுத்து சென்றனர்.
மாத்திரைகளுக்கு தரப்பட்ட பேட்ஜ் எண்கள் பட்டியலை வைத்து சோதனை செய்யும் போது போலி மாத்திரைகள் இருக்கிறதா என்பது தெரியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் சிபிசிஐடி போலீஸாருடன் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பங்கேற்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "நல்ல மருந்துடன், போலி மருந்து கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது 100 நல்ல மாத்திரைகளுடன் 400 போலி நிறுவன மாத்திரைகளை கலந்து விற்றுள்ளனர்.
பரிசோதனைக்கு சாம்பிள்கள் எடுத்துள்ளோம். ஒவ்வொரு இடமாக சோதனை நடக்கும்" என்றனர். இந்நிலையில். புதுச்சேரி பூர்ணாங்குப்பம் பகுதியில் போலி மாத்திரை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.
தொடர் விசாரணையில், இந்த போலி மருந்து நிறுவனத்தின் குடோன் இடையார் பாளையத்தில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட முக்கிய நோய்களுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரைகள் போலியாக உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறி யப்பட்டது.
அந்த குடோனில், இந்த போலி மாத்திரைகளை தயாரிக்கும் இயந்திரங்கள், பேக்கிங் பொருட்களும் இருந்தன. அவைகளை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 30 கோடி வரை இருக்கும் என்று தெரிவித்தனர்.